கல்லூரி மாணவியை கொன்று 30 பவுன் நகைகள் கொள்ளை


கல்லூரி மாணவியை கொன்று 30 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 27 April 2021 11:28 PM IST (Updated: 27 April 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவியை கொன்று 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை, ஏப்.28-
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவியை கொன்று 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
புதுக்கோட்டை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் லோகப்பிரியா (வயது 20).
இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். பழனியப்பன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சிவகாமி வேலைக்கு சென்ற நிலையில் லோகப்பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் நேற்று சிவகாமி வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது‌. அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் லோகப்பிரியா முகத்தில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு மற்றும் கணேஷ் நகர் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர் வீட்டின் உள்ளே சென்று லோகப்பிரியாவை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் அந்த நபர் லோகப்பிரியாவுக்கு தெரிந்த நபராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுமட்டுமின்றி உறவினர் ஒருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பதிவு திருமணம்?
மேலும் விசாரணையில் லோகப்பிரியா வாலிபர் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். லோகப்பிரியாவை கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இந்த கொலை சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில்  பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தும் விசாரிக்கின்றனர்.
மோப்பநாய்
கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நாய் சிறிது தூரம் சென்று மீண்டும் வீட்டிற்குள் வந்து பின் பிரதான சாலைக்கு சென்றது. தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். வீட்டிலிருந்த ஸ்கூட்டர் காணாமல் போயிருந்தது தெரியவந்தது அதனை கொலையாளி திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

Next Story