அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது
குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது.
கரூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 54 ஆயிரம் ஏக்கம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி அணை பயன்பட்டு வருகிறது. கடந்த 1 மாதமாக கரூரில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பயிர்கள் காயும் நிலையில் உள்ளது. மேலும் அமராவதி ஆற்றின் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வற்றி வருகிறது. இதனையடுத்து கரூர் மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த 21-ந் தேதி அமராவதி அணையில் இருந்து ஆற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது கரூர் மாவட்ட எல்லையை கடந்து நேற்று முன்தினம் நகர எல்லைப்பகுதியான செட்டிப்பாளையம் கதவணையை வந்தடைந்தது. நேற்று அதிகாலை ஆண்டாங்கோவில் தடுப்பாணையை தாண்டி தண்ணீர் சென்றது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story