தற்கொலை செய்த விவசாயி உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலை மறியல்


தற்கொலை செய்த விவசாயி உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 April 2021 1:24 AM IST (Updated: 28 April 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே தற்கொலை செய்த விவசாயி உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்

உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே தற்கொலை செய்த விவசாயி உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். மேலும் அந்த வழியாக வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 48). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வீட்டுமனை இடம் வாங்கியுள்ளார். இந்த இடத்தில் தற்போது அவர் வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் அந்த பகுதியில் வசிக்கும் சிலர் நாங்கள் வசிக்கும் பகுதியில் நீங்கள் வீடு கட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சகாதேவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 
இதையடுத்து அவரின் உறவினர்களும் கிராம மக்களும் ஒன்று சேர்ந்து அவரின் உடலை வாங்க மறுத்ததுடன் இவரின் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி உசிலம்பட்டி-மதுரை செல்லும் சாலையில் தி.விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
கார் மறிப்பு
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன், திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதற்கிடையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தந்தை மரணமடைந்த துக்க நிகழ்ச்சிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுவிட்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரின் காரை மறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதனை கண்ட போலீசார் உடனடியாக முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானம் செய்து ஓ.பன்னீர்செல்வம் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதை தொடர்ந்து அவரது கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சாலை மறியலால் உசிலம்பட்டி-மதுரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story