விதிமீறி இயக்கப்பட்ட 26 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு


விதிமீறி இயக்கப்பட்ட 26 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 April 2021 7:55 PM GMT (Updated: 27 April 2021 7:55 PM GMT)

விதிமீறி இயக்கப்பட்ட 26 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு

மதுரை
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், மினி பஸ்களில் இருக்கைகளை தவிர்த்து பயணிகள் நின்றபடி பயணிக்க கூடாது என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் அதிகாரிகள் நகரின் பல இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த வாகன தணிக்கையின் போது, சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாமல் பயணிகளை ஏற்றி சென்ற 15 ஆட்டோ உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோல், 2 ஆட்டோக்கள் உரிய ஆவணமின்றி இயக்கப்பட்டதால் அவை பறிமுதல் செய்யப்பட்டன. கூடுதல் ஆட்களை ஏற்றி கொரோனா பரவல் விதிகளை மீறிய 10 மேக்சி கேப் வாகன உரிமையாளர்கள் மீதும், ஒரு மினி பஸ்சில் கூடுதல் பயணிகளை அனுமதித்த உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் கூறுகையில், அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்த சிறப்பு தணிக்கை நடைபெற்று வருகிறது. அதனை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Next Story