100 நாள் வேலையில் கட்டுப்பாடுகளை ரத்து செய்ய கிராம மக்கள் வலியுறுத்தல்


100 நாள் வேலையில் கட்டுப்பாடுகளை ரத்து செய்ய கிராம மக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 April 2021 2:49 AM IST (Updated: 28 April 2021 4:37 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகங்கை, 

கொரோனா பரவல் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவதுடன் அரசு மற்றும் அரசு சாரா பணியிடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் வெளியிட்டு வருகிறது. 
இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில்  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பானை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதில் 55 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் வியாதியஸ்தர்களை வேலையில் ஈடுபடுத்த வேண்டாம்.

காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருப்பவர்களை ஈடுபடுத்த வேண்டாம். சமூக இடைவெளியை பின்பற்றி 100 நாள் பணியை செய்ய வேண்டும். மேலும் பணி செய்ய வருபவர்களுக்கு கிருமி நாசினி கொண்டு கைகழுவ வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என 13 விதிமுறைகளை பின்பற்ற அரசாணையை வெளியிட்டு உள்ளது. 

ஏற்கனவே வெளியூர் சென்று வேலை செய்ய இயலாத முதியவர்கள் குறைந்த பட்ச வருமானமான இந்த வேலையின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தங்களது ஜீவனாம்சத்தை நடத்திவரும் நிலையில் அவர்களை 100  வேலையில் ஈடுபடுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் வருமானம் இன்றி பட்டினியால் வாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே அவர்களுக்கு கொரோனா விதிகளை பின்பற்றி வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிவகங்கையை சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வலியுறுத்தி உள்ளனர்.

Next Story