நடிகை மாலாஸ்ரீயின் கணவர் ராமு கொரோனாவுக்கு மரணம்


நடிகை மாலாஸ்ரீயின் கணவர் ராமு.
x
நடிகை மாலாஸ்ரீயின் கணவர் ராமு.
தினத்தந்தி 28 April 2021 2:49 AM IST (Updated: 28 April 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

நடிகை மாலாஸ்ரீயின் கணவர் கொரோனாவுக்கு பலியானார்.

பெங்களூரு: கன்னடத்தில் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்தவர் ராமு. இவர் லாக்அப் டெத், ஏ.கே.47, கலாசிபாளையா, கங்கா உள்பட 31 திரைப்படங்களை தயாரித்து உள்ளார். கன்னடத்தில் பிரபல நடிகையாக இருக்கும் மாலாஸ்ரீ, ராமுவின் மனைவி ஆவார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் ராமு மரணம் அடைந்தார். இந்த நிலையில் ராமுவின் உடல் அவரது சொந்த ஊரான துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா கோடிஜென்னஹள்ளியில் நேற்று தகனம் செய்யப்பட்டது. 

அவரது இறுதிசடங்கில் மனைவி மாலாஸ்ரீ, உறவினர்கள், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர். ராமுவின் மறைவுக்கு நடிகை சுமலதா அம்பரீஷ் எம்.பி., நடிகர்கள் புனித் ராஜ்குமார், சிவராஜ் குமார், பிரஜ்வல் தேவராஜ், நடிகை மிலனா நாகராஜ் உள்ளிட்ட கன்னட திரையுலகினரும், கன்னட திரைப்பட வர்த்தக சபையும் இரங்கல் தெரிவித்து உள்ளது.

Next Story