கொரோனா பரவல் கட்டுப்பாடு; மேலப்பாளையம் சந்தை மூடல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லை மேலப்பாளையம் சந்தை மூடப்பட்டது.
நெல்லை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலப்பாளையம் சந்தை நேற்று மூடப்பட்டது.
மேலப்பாளையம் சந்தை
நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டக்கரம்மாள்புரம் செல்லும் ரோட்டில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை வியாபாரம் நடைபெறும். மேலும் பல்வேறு வகையான பொருட்கள் சந்தைக்கு வெளியே உள்ள ரோட்டின் இரு பகுதியிலும் குவித்து வைத்து விற்பனை செய்யப்படும்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதையொட்டி நெல்லையில் உள்ள பெரிய வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சலூன் கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. இதேபோல் பெரிய சந்தைகளையும் மூட உத்தரவிடப்பட்டு இருந்தது.
மூடப்பட்டது
அதன்படி மேலப்பாளையம் சந்தையை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் மூடினார்கள். சந்தை நுழைவு வாசல் கேட்டில் கொரோனா பரவலையொட்டி மறு உத்தரவு வரும் வரை சந்தை மூடப்பட்டு இருக்கும் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் சந்தை செயல்படும் என்று கருதிய வியாபாரிகள், விவசாயிகள் நேற்று மேலப்பாளையம் சந்தைக்கு வந்திருந்தனர். அவர்கள் சந்தைக்கு வெளியே நின்று ஆடு, மாடுகளை வாங்கிச்சென்றனர். இதைக்கண்ட மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் கூட்டமாக நின்று வியாபாரம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘சந்தை மூடப்படும் தகவலை முன்கூட்டியே அறிவித்து இருக்கலாம்’’ என்றனர்.
Related Tags :
Next Story