7 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை: கோவை வாலிபருக்கு தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு ஐகோர்ட்டு தீர்ப்பு
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கோவை வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,
கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 34) என்பவரை துடியலூர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. அதில், சந்தோஷ்குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.
மேல்முறையீடு
தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதேபோல தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் சந்தோஷ்குமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்குகளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
குற்றவாளிதான்
சந்தோஷ்குமார்தான் குற்றவாளி என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. அதேநேரம், இந்த வழக்கில் மேலும் ஒரு நபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், திறமையான பெண் போலீஸ் அதிகாரியை கொண்டு மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கீழ்கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை உறுதிசெய்கிறோம். சந்தோஷ்குமார் மீதான போக்சோ குற்றச்சாட்டு மற்றும் கொலை குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் குற்றவாளி என்ற கீழ்கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்து அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.
அரிதான வழக்கில் தூக்கு
அதேநேரம், ஒரு குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள், இதுபோன்ற நபர்களால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம், எந்த விதத்திலும் தங்களை திருத்திக்கொள்ளமாட்டார்கள் என்று ஒரு குற்றவாளியை கருதும்பட்சத்தில்தான் அரிதிலும் அரிதான வழக்காக கருதி அந்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.
தண்டனை ரத்து
எனவே, சந்தோஷ்குமாருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்கிறோம். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கிறோம். அதேநேரம், 25 ஆண்டுகள் வரை அவரை விடுதலை செய்யக்கூடாது. தண்டனையைக் குறைக்கவும் கூடாது.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழ்கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்கிறோம். இதுவரை இந்த தொகையை வழங்கவில்லை என்றால், 3 மாதங்களுக்குள் தமிழக அரசு வழங்கவேண்டும்.
டி.ஐ.ஜி. விசாரணை
அதேபோல, முதல் தகவல் அறிக்கையில் உள்ள குறைபாடுகள் குறித்து, டி.ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கொண்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையை டி.ஜி.பி. தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story