சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க 2-வது நாளாக அலைமோதிய கூட்டம்
தொடர்ந்து 2-வது நாளாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் அதிகளவில் பரிந்துரை செய்கின்றனர்.
ஆனால் இந்த மருந்துக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தட்டுப்பாடு நிலவியது. இதனால், டாக்டர்கள் இந்த மருந்தை வெளியே வாங்கி வர பரிந்துரை செய்தனர். அந்த மருந்து சீட்டை பெற்று கொண்டு பொதுமக்கள் தெருத்தெருவாக மருந்தகங்களை தேடி அலைந்தனர்.
கால் கடுக்க காத்திருந்த மக்கள்
மேலும் இந்த மருந்து வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் தமிழக மருத்துவ பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அரசே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு கவுண்ட்டர் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. மருந்து பெறும் கவுண்ட்டர் திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க பொதுமக்கள் நீண்டவரிசையில் கால் கடுக்க பல மணி நேரம் காத்திருந்து வாங்கி சென்றனர்.
வாக்குவாதம்
இந்த சிறப்பு கவுண்ட்டர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படுவதால், பலர் நீண்ட நேரம் காத்திருந்து வாங்க முடியாத சூழ்நிலை நிலவியது. அவர்களை சுகாதாரத்துறையினர் நாளை (நேற்று) வந்து பெற்று கொள்ளுமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் ரெம்டெசிவிர் மருந்து வாங்க பல மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் நேற்று குவிந்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டது. போலீசார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி பொதுமக்களை வரிசையில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாலை 5 மணிக்கு கவுண்ட்டர் அடைக்கப்பட்டதும், மருந்து வாங்க பல மணி நேரம் காத்திருந்தவர்கள் அங்கிருந்த சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் நாளை (இன்று) வருமாறு திருப்பி அனுப்பினர்.
Related Tags :
Next Story