2020-21 நிதி ஆண்டின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.603 கோடி
2020-21 நிதி ஆண்டின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.603 கோடி ஆகும்.
சென்னை,
தூத்துக்குடியை தலைமையகமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்படுகிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2020-21 நிதி ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையை வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி.ராமமூர்த்தி வங்கியின் இயக்குனர்கள் முன்னிலையில் தூத்துக்குடியில் நேற்று வெளியிட்டார்.
நிகர லாபம்
அதன் விவரம் வருமாறு:-
நிகர லாபம் கடந்த ஆண்டு (2019-20) ரூ.407.69 கோடியில் இருந்து நடப்பாண்டு ரூ.603.33 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 47.99 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த நிதி ஆண்டில் ரூ.36 ஆயிரத்து 825.03 கோடியாக இருந்த வைப்புத்தொகை தற்போது ரூ.40 ஆயிரத்து 970.42 கோடியாக அதிகரித்துள்ளது. இது 11.26 சதவீதம் உயர்வு ஆகும்.
இதேபோல ரூ.65 ஆயிரத்து 61.21 கோடியாக இருந்த மொத்த வணிகம் ரூ.72 ஆயிரத்து 511.45 கோடியாகவும், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகை ரூ.9 ஆயிரத்து 518.05 கோடியில் இருந்து ரூ.11 ஆயிரத்து 685.27 கோடியாகவும், வட்டி இல்லா வருமானம் ரூ.526.45 கோடியில் இருந்து ரூ.644.17 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
நிகர வட்டி வருமானம்
கடந்த ஆண்டு ரூ.850.91 கோடியாக இருந்த வங்கியின் இயக்க செலவுகள் நடப்பாண்டு ரூ.979.66 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 15.13 சதவீதம் உயர்ந்துள்ளது. வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.995.05 கோடியில் இருந்து ரூ.1,202.04 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதன் வளர்ச்சி விகிதம் 20.80 சதவீதம் ஆக இருக்கிறது.
நிகர வட்டி வருமானம் ரூ.1,319.51 கோடியில் இருந்து, ரூ.1,537.53 கோடியாகவும், வட்டி வருமானம் ரூ.3 ஆயிரத்து 466.11 கோடியில் இருந்து ரூ.3 ஆயிரத்து 609.05 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 4.12 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு பங்கின் தற்போதைய புத்தக மதிப்பு ரூ.321.38 ஆக உயர்ந்துள்ளது. இதன் முகமதிப்பு ரூ.10 ஆகும். பங்கு ஆதாயத்தின் மதிப்பு ரூ.42.34 ஆகும்.
Related Tags :
Next Story