மாயமான வாலிபர் வழக்கில் ஒரு வாரத்துக்கு பின்னர் துப்பு துலங்கியது கட்டையால் அடித்து கொன்று முட்புதரில் வீசி சென்றது அம்பலம்
மேடவாக்கத்தில் வாலிபரை கட்டையால் அடித்து கொன்று முட்புதரில் வீசி சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்திபுரத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 23). கூலித்தொழிலாளி. வேலைக்கு சென்ற இவர், கடந்த ஒரு வாரமாக வீடு திரும்பவில்லை. மாயமான வினோத்தை கண்டுபிடித்து தருமாறு அவரது பெற்றோர் கடந்த 2 தினங்களுக்கு பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து மாயமான வினோத்தை தேடி வந்தார். இந்த நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக பழைய குற்றவாளியான மேடவாக்கம் காந்திபுரத்தை சேர்ந்த ஈஸ்வர் என்ற பிரகதீஷ் (25) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது விசாரணையில் போலீசாரிடம் ஈஸ்வர் திடுக்கிடும் தகவலை கூறினார்.
அதில் மாயமான வினோத்தை ஒரு வாரத்திற்கு முன் வடக்குபட்டு ஏரிக்கரை பகுதியில் கட்டையால் அடித்து கொலை செய்து முட்புதரில் வீசிவிட்டு சென்றதாக போலீசாரிடம் கூறினான்.
6 பேர் கைது
உடனே இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த வினோத் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாவது:- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈஸ்வரின் நண்பரும், வேன் டிரைவருமான டில்லிபாபுவை கொலை செய்த கும்பலில் இருந்த சங்குராஜ் என்பவருடன் வினோத் நெருங்கி பழகி வந்துள்ளார். அதில், ஆத்திரமடைந்த ஈஸ்வரின் கும்பல் குடிபோதையில் கடந்த வாரம் வடக்குபட்டு ஏரிக்கரையில் வினோத்தை கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பள்ளிக்கரணை போலீசார் ஈஸ்வர் மற்றும் அவரது கூட்டாளிகளான மேடவாக்கத்தை சேர்ந்த கோபிநாத் (22), மணிகண்டன் (23), அருண்குமார் (22) பிரபாகரன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story