தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 6 பார்வையாளர்கள் நியமனம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 6 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில் ராஜ் கூறினார்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தனித்தனி காப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அந்த அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான செந்தில் ராஜ் நேற்று வாக்கு எண்ணும் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தனித்தனி பாதைகள்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்ட மன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ந் தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கடந்த வாரம் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அரசியல் கட்சியினர் முழுமையான ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் முகவர்கள் வருவதற்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வழிகளிலும் எந்தெந்த தொகுதிக்கான வழி என்பதை குறிக்கும் வகையில் போர்டு வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வழியிலும் 7 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கண்காணிப்பு
இந்த கவுன்டர்களில் சுகாதார பணியாளர்கள் இருந்து உள்ளே வருபவர்களின் உடல்நிலையை கண்காணிப்பார்கள். தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வார்கள்.
மேலும், முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பதை கண்காணிப்பார்கள். அதுபோல வாக்கு எண்ணும் பணிக்காக வரும் அலுவலர்கள் அனைவரும் முகக்கவசம், முழு முகக்கவசம், கையுறை அணிந்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். யாராவது அணியாமல் வந்தால் அவர்களுக்கு நுழைவு வாயிலில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முகவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டியது அவசியம். அதுபோல தடுப்பூசி போட்டதற்கான சான்றும் வைத்திருக்க வேண்டும். எனவே, அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைவரும் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
கிருமிநாசினி
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்.
அதுபோல கழிப்பறை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் சுமார் 200 குப்பைத் தொட்டிகளை வைத்து குப்பைகளை சேகரிக்கவும், முகக்கவசம், கையுறை போன்றவற்றை சேகரிக்க தனி குப்பைத் தொட்டிகளை வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு மேஜைக்கு மேலேயும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு சுற்று முடிவிலும் முடிவுகளை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பார்வையாளர்கள்
6 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. விளாத்திகுளம் தொகுதிக்கு அஸ்வானி குமார் சவுதாரி, தூத்துக்குடி தொகுதிக்கு அப்துல் ரஷீத் வார், திருச்செந்தூர் தொகுதிக்கு சுஷில் குமார் பட்டேல், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு தேவ் கிருஷ்ணா திவாரி, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு அனில் குமார், கோவில்பட்டி தொகுதிக்கு சைல்ஜா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 6 பேரும் இன்று (வியாழக்கிழமை) இரவுக்குள் தூத்துக்குடி வந்துவிடுவதாக தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
மீறுவோர் மீது வழக்கு
அதேபோன்று தேர்தல் முடிவு வந்ததும் வெற்றி விழா ஊர்வலங்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எந்தவித ஆரவார கொண்டாட்டங்களும் கூடாது என தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்து உள்ளது. எனவே, இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதனை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story