உடுமலையை அருகே 15நாட்களாக குடிநீர் வராததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.


உடுமலையை அருகே 15நாட்களாக குடிநீர் வராததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 28 April 2021 9:57 PM IST (Updated: 28 April 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அருகே 15நாட்களாக குடிநீர் வராததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உடுமலை, 
உடுமலையை அருகே 15நாட்களாக குடிநீர் வராததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதனால் உடுமலை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர் ஊராட்சி
உடுமலை அருகே  அந்தியூர் ஊராட்சி உள்ளது.  இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அந்தியூர், ஜீவாநகர், வேலன்நகர், இந்திரா குடியிருப்பு மற்றும் சடையபாளையம் ஆகிய இடங்களில்  500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பூலாங்கிணர் கூட்டுக்குடி நீர்திட்டம் மற்றும் கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம்  மூலம் குடிநீர் வசதி பெற்று வருகிறது.
இந்த ஊராட்சிக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. 5 நாட்களுக்கு ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒருமுறை என்று குடிநீர் வந்துகொண்டிருந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
 சாலைமறியல்
இதைத்தொடர்ந்து நேற்று  காலை  7 மணியளவில் அந்தியூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர்.பின்னர் திடீரென்று 7.15 மணியளவில் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இது பற்றிய தகவல் கிடைத்ததும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்  விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்கள், அதிகாரிகள் வரட்டும் தங்கள் பகுதிக்கு குடிநீர் வந்தால்தான் சாலை மறியலை கைவிடுவோம் என்றனர்.
அப்போது அனைத்துமகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, ஒலிபெருக்கி மூலம் “ கொரோனா வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இப்படி சமூக இடைவெளியில்லாமல் கூட்டமாக இருக்காதீர்கள். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் வந்து விடுவார்கள்.அதனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து சாலைமறியலை கைவிட்டு சாலை ஓரத்திற்கு செல்லும்படி” கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் காலை 8மணிக்கு சாலைமறியலை கைவிட்டு சாலை ஓரத்திற்கு சென்று நின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியலின்போது அந்த இடத்திற்கு 2 புறமும் 1 கி.மீ.தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. சாலை மறியல் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வந்த சில வாகனங்கள், சாலை மறியல் நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் இருந்து 200அடிகள் தூரத்தில் பிரியும் பண்ணைக்கிணறு செல்லும் சாலையில் திரும்பி சென்றன. இதைக்கண்ட சிலர் அங்கு விரைந்து சென்று, அந்த சாலையை அடைத்தபடி உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலை 7.15 மணிமுதல் 8மணிவரை ¾மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
போலீசாரின் வேண்டுகோளை ஏற்று சாலைமறியல் கைவிடப்பட்ட நிலையில், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் ரவிச்சந்திரன், சின்னசாமி ஆகியோர் அங்கு வந்துசேர்ந்தனர்.அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையில்  அந்தியூர் ஊராட்சி மன்றத்தலைவர் பாலதுரை, துணைத்தலைவர் வெங்கிடுபதி, உடுமலை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்சாமி மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளர்கள் பேசும்போது, இந்த பகுதிக்கு புதிய குடிநீர்திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளின்போது இந்த பகுதிக்கு ஏற்கனவேகுடிநீர் கொண்டுவரப்படும் பிரதான குழாயில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் வரவில்லை.இந்த பிரதான குழாயில் பழுதை சரிசெய்துஇன்னும் 2 அல்லது 3நாட்களில் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story