3 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் இன்றி வறண்ட வீராணம் ஏரி
வீராணம் ஏரி 3 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் இன்றி வறண்டது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.
இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர் மட்டத்திற்கு ஏற்ப தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் வீராணம் ஏரி 2 முறை முழு கொள்ளளவை எட்டியது.
வறண்டது
இதற்கிடையே தற்போது உலக வங்கி நிதி உதவியுடன் வீராணம் ஏரியில் ரூ.73 கோடியே 64 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றினர். மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், கடும் வெயில் காரணமாகவும் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் தற்போது வீராணம் ஏரி தண்ணீர் இன்றி வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வறண்ட நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடாக பரவனாறு பகுதியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது.
சிறப்பு கண்காணிப்புக்குழு
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியை சீரமைக்க கடந்த 2016-ம் ஆண்டு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது வீராணம் ஏரியை உலக வங்கி நிதி உதவியுடன் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் முடிவடைய 2 ஆண்டுகள் ஆகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சீரமைப்பு பணிகள் சுமார் 50 சதவீதம் மட்டுமே நடந்தது. முழுமையாக முடிக்கப்படவில்லை. அதுபோல் இல்லாமல், தற்போது நடைபெற்று வரும் சீரமைப்பு பணியை முழுமையாக முடிக்க வேண்டும். இதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அதிகாரிகளை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story