கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
கோவை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆக்சிஜன் வசதி
கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 310 படுக்கைகளில் 178 படுக்கைகளுக்குத் தான் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதி செய்யப்பட்டு உள்ளது.
மற்ற படுக்கைகளுக்கு அந்த வசதி செய்து தரப்படவில்லை. எனவே மற்ற படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதி செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
9½ டன் உற்பத்தி
கோவை மாவட்டத்தில் 2 தனியார் நிறுவனங்கள் மூலம் தினமும் 9½ டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை அனைத்தும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இது தவிர 5 தனியார் நிறுவனத்தினர் ஆக்சிஜனை கேரள மாநிலம் கஞ்சிக் கோட்டில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து விலைக்கு வாங்கி சிலிண்டர்களில் அடைத்து ஆஸ்பத்திரிகளுக்கு சப்ளை செய்கின்றன.
கோவையில் உள்ள 5 நிறுவனங்களில் 80 டன் ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் இருந்தாலும் தற்போது 60 டன் ஆக்சிஜன் தான் கேரளாவில் இருந்து சப்ளை செய்யப்படுகின்றன.
பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தற்போது உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அளிப்பதற்கான ஆக்சிஜன் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானால் இன்னும் ஆக்சிஜன் தேவை.
அத்தகைய நிலைமையை சமாளிக்க கோவைக்கு கூடுதலாக ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும். எனவே கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
புதிய தொழிற்சாலைகள் தொடங்க முடியாது
கோவை மாவட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே 2 நிறுவனங்கள் தான் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. இனி புதிதாக நிறுவனங்கள் தொடங்கினாலும் அவர்களால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாது.
ஏனென்றால் கோவையில் 2 தனியார் நிறுவனங்கள் தான் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான எந்திரங்களை தயாரிக்கின்றன. அந்த நிறுவனங்களிடம் வருகிற ஜூன் மாதம் வரை எந்திரங்களை சப்ளை செய்ய ஆர்டர்கள் உள்ளன.
எனவே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை தொடங்க வேண்டுமென்றாலும் அது முடியாது. எனவே கோவையின் ஆக்சிஜன் தேவையை சமாளிக்க வேண்டுமென்றால் மற்ற மாவட்டங்களில் இருந்து தான் கொண்டு வரப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story