வாகனத்தில் அடிபட்ட புள்ளிமான்


வாகனத்தில் அடிபட்ட புள்ளிமான்
x
தினத்தந்தி 28 April 2021 11:26 PM IST (Updated: 28 April 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் செத்தது.

ஆவூர், ஏப்.29-
விராலிமலை அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் வாகனத்தில் அடிபட்டு செத்தது. மான்கள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதியில் தண்ணீர் தாட்டி அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பகுதி
விராலிமலை தாலுகா, சித்தாம்பூர், கோட்டைக்காரன்பட்டி, மலம்பட்டி, கல்லுப்பட்டி, ஆம்பூர்பட்டிநால்ரோடு ஆகிய ஊர்களுக்கு இடையில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் லிங்கமலை வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மான்கள், நரி, மயில், முயல் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன.
தற்போது, கோடை காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் வனப்பகுதியில் உள்ள மான்கள் குடிநீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. இந்த மான்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் தண்ணீரைத் தேடி அலைவதுடன், விவசாயிகள் விளைவித்த கடலை, உளுந்து, பூசணி, வெண்டை போன்ற பயிர்களை மேய்ந்து நாசப்படுத்தி செல்கிறது.
வாகனத்தில் அடிப்பட்டு சாவு
அதேநேரத்தில் வனப்பகுதியில் இருந்து ரோட்டை கடந்து செல்லும்போது, விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. மேலும் நாய்களிடம் சிக்கி பலியாகும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை ஆவூர் அருகே மாத்தூர்- இலுப்பூர் சாலையோரத்தில் சிங்கத்தாகுறிச்சி மாம்பாடி என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி செத்தது. தகவல் அறிந்த கீரனூர் வன அலுவலர் வெங்கடேசன் மற்றும் வனக்காவலர்கள் இறந்துகிடந்த மானை கைப்பற்றி கீரனூர் வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின் புதைக்கப்பட்டது.
எனவே மான்கள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விபத்தில் சிக்குவதை தடுக்க வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் மான்கள் ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டு விபத்து போன்ற அசம்பாவித சம்பவத்தில் சிக்குவது தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

Next Story