லால்குடி அருகே கொலை செய்யப்பட்ட பெண் கோவையை சேர்ந்தவர் கள்ளக்காதலன் கைது
லால்குடி அருகே கொலை செய்யப்பட்ட பெண் கோவையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரை கொலை செய்ததாக அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
லால்குடி,
லால்குடி அருகே கொலை செய்யப்பட்ட பெண் கோவையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரை கொலை செய்ததாக அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை பெண் கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எல்.அபிஷேகபுரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 22-ந்தேதி அடையாளம் தெரியாத பெண் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அங்கு துண்டு, துண்டாக கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆதார்அட்டையை வைத்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 48) என்பதும், அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து இருப்பதும், 2-வது கணவரை விட்டு 6 மாதங்களுக்கு முன்பு பிரிந்து கோவையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
கள்ளத்தொடர்பு
இந்தநிலையில் திருவளர்ச்சோலை மேலதெருவைச் சேர்ந்த பாஸ்கர் (38) தனது முதல் மனைவியை பிரிந்து நாகை மாவட்டம் கீழவெளியூரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அப்போது கீழவெளியூர் பகுதியைச்சேர்ந்த நாகராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாகராஜ் கோவையில் வேலை செய்த போது, ராஜேஸ்வரியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கீழவெளியூரில் குடும்பம் நடத்தி வந்தனர். இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராஜேஸ்வரி மீண்டும் கோவைக்கு சென்றுவிட்டார்.
அடித்துக்கொலை
இதற்கிடையே பாஸ்கர் செல்போன் மூலம் ராஜேஸ்வரிக்கு நாகராஜ் அடிக்கடி தொடர்பு கொண்டதால், பாஸ்கருக்கும், ராஜேஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி திருச்சிக்கு வந்த ராஜேஸ்வரியை, பாஸ்கர் கல்லணைக்கு அழைத்துச்சென்றுள்ளார். பின்னர், இருவரும் இரவு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கு வழியாக எல்.அபிஷேகபுரம் பகுதிக்கு சென்றனர்.
அங்கு இருந்த போது நாகராஜ் மீண்டும் ராஜேஸ்வரிக்கு போன் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர், ராஜேஸ்வரியை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்து விட்டு, அவரது நகை செல்போன் மற்றும் பணத்தை எடுத்துச்சென்றதும் தெரியவந்தது.
கள்ளக்காதலன் கைது
இந்தநிலையில், ராஜேஸ்வரியின் செல்போனில் பாஸ்கர் தனது சிம் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் ராஜேஸ்வரியின் செல்போன் ஐ.எம்.இ. எண் மூலம் கீழவெளியூரில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் பாஸ்கரை போலீசார் பிடித்து கைது செய்தனர். பாஸ்கர் மீது கொலை, ஆடு திருட்டு என்று பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story