காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க பேட்டரி மூலம் இயங்கும் மின்வேலி
காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை சுற்றி பேட்டரி மூலம் இயங்கும் மின்வேலி அமைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடுகாணி தாவரவியல் பூங்கா அரங்கில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு தேவாலா வனச்சரகர் கலைவேந்தன், பறக்கும் படை வனச்சரகர் கணேசன், நாடுகாணி வனச்சரகர் பிரசாத், டேன்டீ மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவது, அதை தடுக்க வேண்டிய வழிகள், மனித-வனவிலங்கு மோதல் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. அதன்பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:-
பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-4) பகுதியில் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை காட்டுயானைகள் உடைத்து அட்டகாசம் செய்கிறது. அங்கு வீடுகளை சுற்றி பேட்டரி மூலம் இயங்கும் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காட்டுயானைகள் ஊருக்குள் வந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகள் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதில் நாடுகாணி, தேவாலா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story