கோடை காலத்தை முன்னிட்டு மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் பணி மும்முரம்
கோடை காலத்தை முன்னிட்டு காருகுறிச்சியில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
சேரன்மாதேவி, ஏப்:
கோடைக்காலத்தை முன்னிட்டு, காருகுறிச்சியில் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மண்பாண்ட பொருட்கள்
பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் மண்பாண்ட பொருட்களை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே அமைந்துள்ள காருகுறிச்சி கிராமமானது நாதசுவர வித்வான் அருணாசலத்தை தந்ததோடு மண்பாண்ட பொருட்களுக்கும் சிறப்பு பெற்றது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியின் கரையில் கிடைக்கப் பெறும் மூலிகை மண்ணால் உருவாக்கப்படும் மண்பாண்ட பொருட்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
தற்போது கோடைவெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், காருகுறிச்சியில் மண்பாண்ட பொருட்கள் விற்பனை களைகட்டி உள்ளது. ஏராளமானவர்கள் பல்வேறு வடிவிலான மண் பானைகள், அலங்கார ஜாடிகள் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் மண்பாண்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் இரவு பகலாக மண்பானைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
எழில்மிகு கலைநயத்துடன்...
காருகுறிச்சியில் 200-க்கும் மேற்பட்ட விதவிதமான மண்பாண்ட பொருட்களை தயாரித்து வருகின்றோம். சுவாமி பொம்மைகள், கொலு பொம்மைகள், அகல் விளக்குகள், பொங்கல் பானைகள், பூந்தொட்டிகள், அடுப்புகள், உண்டியல்கள், திருஷ்டி பொம்மைகள், துளசி மாடம் என்று பல்வேறு வகையான பொருட்களை எழில்மிகு கலைநயத்துடன் உருவாக்குகின்றோம்.
தமிழர்களின் பெருமையை உணர்ந்த அனைவரும் மண்பாண்டங்கள் மூலம் சமையல் செய்வதற்கு தொடங்கி உள்ளனர். இதனால் பல்வேறு வகையான வடிவிலும் மண்பானைகளை தயாரித்து விற்கின்றோம். காய்கறிகள், பழங்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும் வகையிலான மண்பானை பிரிட்ஜ், உணவுகளை நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கும் பல்வேறு வடிவிலான பானைகள் போன்றவையும் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
அடையாள அட்டை
கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் மண்பாண்ட தொழில் நலிவடைந்த நிலையில் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்விலும் மண்பாண்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றோம். மண்பாண்டம் தயாரிப்பதற்கு தேவையான மண்ணை சிரமமின்றி பெறும் வகையில், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மண்பாண்ட தொழிற்பயிற்சி வழங்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story