கொரோனா வடிவில் வந்த சோதனை கிடு,கிடுவென சரிந்த தேங்காய் விலையால் தென்னை விவசாயிகள் கவலை
கொரோனா தாக்கம் எதிரொலியாக தேங்காய் விலை கிடு, கிடுவென சரிந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர்.
சேதுபாவாசத்திரம்:-
கொரோனா தாக்கம் எதிரொலியாக தேங்காய் விலை கிடு, கிடுவென சரிந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர்.
தென்னை சாகுபடி
தஞ்சை மாவட்ட விவசாயிகளின் முதல் வாழ்வாதாரமாக நெல் சாகுபடி திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது வாழ்வாதாரமாக தென்னை சாகுபடி விளங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக திகழும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் மற்றும் பட்டு்ககோட்டை பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் முன்பு பாசன வயல்களாக இருந்த பெரும்பாலான பகுதிகள் தற்போது தென்னந்தோப்புகளாக மாறி விட்டன. நெல் சாகுபடிக்கு தேவையான போதுமான தண்ணீர் இந்த பகுதிகளுக்கு சரிவர கிடைக்காததாலும், கூலி தொழிலாளர்கள் தட்டுப்பாடு, உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்களின் கடும் விலை உயர்வு, வேளாண் பணிகளுக்கு தேவையான எந்திரங்கள் தட்டுப்பாடு ஆகியவற்றால் இந்த பகுதி விவசாயிகள் அனைவரும் நெல் சாகுபடியை மறந்து தென்னை சாகுபடிக்கு மாறி விட்டனர்.
உலக அளவில் புகழ்பெற்றது
சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் விளையும் தேங்காய்கள் அளவு, சுவை, மனம் போன்றவைகள் மூலம் பெயர் பெற்றுள்ளது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, இலங்கை உள்பட உலக அளவில் பல்வேறு நாடுகள் விரும்பப்படும் இந்த பகுதி தேங்காய்கள் புகழ்பெற்ற பிஸ்கட் கம்பெனிகளின் தயாரிப்புகளுக்கு விருப்பமாக உள்ளது.
இப்படி புகழ் பெற்ற தேங்காய்கள் காங்கேயம், வெள்ளக்கோவில் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2017-18 ம் ஆண்டுகளில் தேங்காய் விலை கிடு, கிடு என உயர்ந்து ஒரு தேங்காய் ரூ.25 முதல் ரூ.30 வரையில் விற்பனையானது.
வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள்
அதே நேரத்தில் கடந்த 2018- ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் சேதுபாவாசத்திரம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. இந்த பகுதிகளில் தலைநிமிர்ந்து நின்ற பெரும்பாலான தென்னை மரங்கள் தலைசாய்ந்து மண்ணில் வீழ்ந்து கிடந்தன.
கஜா புயலுக்கு தப்பிய தென்னை மரங்களிலும், தேங்காய் விளைச்சல் குறைந்து மிகக் குறைந்த அளவே வெட்டப்படும் நிலை உள்ளது. சேதம் அடைந்த மரங்களில் வெட்டப்படும் தேங்காய்கள் எண்ணெய் சத்து இன்றி, எடை குறைந்து, தரம் குறைந்து வெளிநாடுகளுக்கும், வெளியிடங்களுக்கும் அனுப்ப முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது. இதனால் இந்த மாதிரியான தேங்காய்களை வியாபாரிகள் விரும்பி கொள்முதல் செய்யவில்லை.
கொரோனா வடிவில் வந்த சோதனை
இதனால் தேங்காய் விலை சரிந்து கடந்த 20 மாதங்களாக ஒரு தேங்காய் ரூ.10 முதல் ரூ.12-க்கு விற்பனையானது. தேங்காய் விளைச்சலும் குறைந்து உரிய விலையும் கிடைக்காததால் போதுமான வருமானமின்றி கடைமடை தென்னை விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தனர்.
கடந்த 20 மாதங்களாக தென்னை விவசாயிகளின் கடும் உழைப்பால் தப்பி நின்ற தென்னை மரங்களில் எண்ணெய் சத்து மற்றும் எடையுடன் கூடிய தேங்காய்கள் விளைந்தன. தேங்காய் விளைச்சலும் அதிகரித்து வந்த நிலையில் விவசாயிகளுக்கு கொரோனா வடிவில் அடுத்த சோதனை வந்துள்ளது.
விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை
கடந்த சில மாதங்களாக தேங்காய்களின் விலை அதிகரித்து வந்தது. ஒரு தேங்காய் ரூ.15 முதல் ரூ.25 வரையில் விற்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேங்காய் விலை உயர்ந்ததால் தென்னை விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இவர்களது மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
கொரோனா பரவல் காரணமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிறு முழு ஊரடங்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் கோவில்கள், வழிபாட்டு தலங்கள் மூடிக்கிடப்பது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு போன்ற காரணங்களால் தென்னை விவசாயிகளுக்கு மேலும் சோதனை காலமாக மாறி விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் உயர்ந்த தேங்காய் விலை தற்போது கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக கிடு, கிடு வென சரிந்து ரூ.10 முதல் ரூ.12 வரையில் விற்கப்படுகிறது. தேங்காய் விலை சரிந்ததால் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை பகுதி தென்னை விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
Related Tags :
Next Story