சின்னாளப்பட்டி கோவிலில் நடந்த ஐம்பொன் சிலைகள் கொள்ளை வழக்கில் மர்மம் நீடிப்பு
சின்னாளப்பட்டி கோவிலில் நடந்த ஐம்பொன் சிலை கொள்ளை வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது.
சின்னாளபட்டி:
சின்னாளப்பட்டி கோவிலில் நடந்த ஐம்பொன் சிலை கொள்ளை வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது.
ஐம்பொன் சிலைகள் கொள்ளை
திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பிரிவில், பிருந்தாவன தோப்பில் பழமை வாய்ந்த லட்சுமி நாராயணன் சுவாமி கோவில் உள்ளது.
கடந்த மாதம் 24-ந்தேதியன்று இந்த கோவிலில் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கருவறையில் இருந்த ஐம்பொன்னாலான ராமர், லட்சுமணர் மற்றும் சீதை சிலைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதேபோல் கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான சங்கு சக்கரம், செம்பு பாத்திரங்கள், கோவிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவில் பூசாரி நாகராஜின் மொபட் ஆகியவற்றையும் திருடி சென்றனர்.
மொபட் மீட்பு
இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், 3 சிலைகள் மற்றும் வெள்ளி பொருட்களை ஒரு சாக்குப்பையில் கட்டி கோவிலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த பூசாரி நாகராஜின் மொபட்டில் கொள்ளையர்கள் ஏற்றி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதற்கிடையே விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே சாலையோரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூசாரி நாகராஜின் மொபட் கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சின்னாளப்பட்டி போலீசார் அங்கு சென்று மொபட்டை மீட்டனர்.
மர்மம் நீடிப்பு
முன்னதாக அன்றைய தினம் காலையில், சாத்தூர் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மொபட்டில் சாமி சிலைகள் இருப்பதை பார்த்து விசாரித்தனர்.
கோவில் திருவிழாவுக்காக சாமி சிலைகளை வாங்கி செல்வதாக அந்த நபர் கூறியதை தொடர்ந்து போலீசார் விட்டுவிட்டனர். இதனால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையன், சிலைகளை எடுத்து விட்டு சாத்தூர் சுங்கச்சாவடியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் மொபட்டை விட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதனிடையே ஐம்பொன் சிலைகளை திருடிய வழக்கு, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. எனவே இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த வழக்கில் துப்புத்துலங்காமல் மர்மம் நீடித்து வருகிறது.
Related Tags :
Next Story