முழு ஊரடங்கு அமல்: முதல்நாளில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்


முழு ஊரடங்கு அமல்: முதல்நாளில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்
x
தினத்தந்தி 29 April 2021 2:07 AM IST (Updated: 29 April 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கின் முதல் நாளான நேற்று பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். காலை 10 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு: கர்நாடகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கின் முதல் நாளான நேற்று பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். காலை 10 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இறைச்சி கடைகள்

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்தது. முதல் நாளான நேற்று தலைநகர் பெங்களூருவில் காலை 10 மணிக்கு மேல் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், இறைச்சி கடைகள், பலசரக்கு கடைகள், உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருந்தன.

இதனால் மக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், காய்கறி, பழங்களை வாங்க கடைகளில் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ேக.ஆர்.மார்க்கெட், கோரமங்களா உள்ளிட்ட சில மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டது. மக்கள் கொரோனாவை பற்றி கவலைப்படாமல் பொருட்கள் வாங்குவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினர்.

மதுக்கடைகள்

காலை 10 மணிக்கு மேல் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். சாலைகளில் நடமாடுபவர்களை உடனடியாக வீடுகளுக்கு சென்றுவிடும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஒலிெபருக்கி மூலம் இந்த எச்சரிக்கையை அவர்கள் விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று சேர்ந்தனர். உணவகங்கள், மதுக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் அங்கு அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பார்சல் மூலம் உணவு மற்றும் மதுபானங்களை வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவ சேவையை வழங்கும் பிற அலுவலகங்கள், உற்பத்தி துறையை சேர்ந்த நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் வழக்கம்போல் எந்த தடையும் இன்றி செயல்பட்டன.

தோப்புக்கரணம்

பெங்களூருவில் சிலர் தேவையின்றி வாகனங்களில் சாலைகளில் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து நூதன தண்டனை வழங்கினர். அதாவது போலீசார், அவர்களை தோப்புக்கரணம்  போட வைத்தனர். அதன் பிறகு அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். போலீசார் கையில் பெரிய தடியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சில பகுதிகளில் வாகனங்களில் வந்தவர்களை தடுத்து விசாரித்தபோது, மருத்துவமனைக்கு செல்வதாக கூறினர். ஆனால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாதபோதும் அவர்கள் பொய்யான தகவலை கூறியதால், அவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வீடுகளுக்குள் முடங்கினர்

அதே நேரத்தில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டைகளை காட்டிவிட்டு பணிக்கு சென்றனர். பெங்களூருவில் போலீசார் பெரும்பாலான மேம்பாலங்களை இரும்பு தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர். மேலும் இரட்டை சாலைகள் உள்ள பகுதிகளில் ஒரு பக்க சாலையை தடுப்புகள் வைத்து போலீசார் மூடியுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அதற்குரிய ஆவணங்களை போலீசாரிடம் காட்டிவிட்டு சென்றனர். அதே போல் மைசூரு, கலபுரகி, பெலகாவி, மங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இதே நிலை நீடித்தது. ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். கலபுரகி உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

மெட்ரோ ரெயில்

இதன் காரணமாக பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கெம்பேகவுடா சாலை, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பல சாலைகள் வெறிச்சோடி இருந்தன. பெங்களூருவில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள், விமான நிலையத்திற்கு செல்பவர்களின் வசதிக்காக குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story