சேலம் மாவட்டத்தில் புதிதாக 489 பேருக்கு தொற்று உறுதி: கொரோனாவுக்கு 3-வது நாளாக 5 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் புதிதாக 489 பேருக்கு தொற்று உறுதி: கொரோனாவுக்கு 3-வது நாளாக 5 பேர் பலி
x
தினத்தந்தி 29 April 2021 4:33 AM IST (Updated: 29 April 2021 4:33 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு கடந்த சில நாட்களாக 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 456 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 489 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 280 பேர், ஆத்தூரில் 23 பேர், ஓமலூரில் 21 பேர், தலைவாசலில் 14 பேர், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், சங்ககிரியில் 12 பேர், வாழப்பாடி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், சேலம் ஒன்றியம், எடப்பாடி, கெங்கவல்லி, கடையாம்பட்டி, மேச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 9 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 8 பேர், நங்கவள்ளி, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், மகுடஞ்சாவடியில் 5 பேர், கொங்கணாபுரத்தில் 4 பேர், தாரமங்கலத்தில் 3 பேர், மேட்டூரில் 2 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
40 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 490 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3,533 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 85-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
5 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதேபோல் சேலத்தை சேர்ந்த 58 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார். மேலும் 64, 71 வயதுடைய 2 முதியவர்களும், 56 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது.

Next Story