கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் மரணம்


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் மரணம்
x
தினத்தந்தி 29 April 2021 6:07 AM IST (Updated: 29 April 2021 6:07 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் மரணம் அடைந்தார்.

ஏக்நாத் கெய்க்வாட்

மும்பை தாராவி தொகுதி எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வி துறை மந்திரியுமான வர்ஷா கெய்க்வாட்டின் தந்தை ஏக்நாத் கெய்க்வாட். 81 வயதான இவர், சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் தென்மும்பை பகுதியில் உள்ள பிரீச் கேண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை 10 மணி மணியளவில் ஏக்நாத் கெய்க்வாட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தாதர் சிவாஜி பார்க் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மந்திரி பதவி வகித்தவர்

மரணம் அடைந்த ஏக்நாத் கெய்க்வாட் 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை விலாஸ்ராவ் தேஷ்முக் மந்திரி சபையில் சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் சமூக நீதி துறை மந்திரியாக பதவி வகித்தவர். மேலும் 3 தடவை எம்.எல்.ஏ.வாகவும், 2 தடவை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். மும்பை காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏக்நாத் கெய்க்வாட் தந்தையை போன்ற தோற்றம் உடையவர். எங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். அவரது மறைவு காங்கிரசுக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஏக்நாத் கெய்க்வாட் மும்பை தமிழர்களுடன் நெருங்கி பழகியவர். எனவே தமிழ் பிரமுகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


Next Story