எழுத்தாளர் மனோஜ்தாஸ் மரணம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்
எழுத்தாளர் மனோஜ்தாஸ் மரணமடைந்தார்.
ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் சங்கரி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்தாஸ் (வயது 87). இவர் தனது மனைவி பிரதிஜ்னாவுடன் புதுச்சேரியில் வசித்து வந்தார். இவர், ஒரியா, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவர் கடந்த 1972-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி, 2001-ம் ஆண்டு பத்மஸ்ரீ், 2020-ம் ஆண்டு பத்மபூஷண் ஆகிய விருதுகளை பெற்றவர் ஆவார்.
சமீபகாலமாக சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட மனோஜ்தாஸ், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். இதையடுத்து நேற்று கருவடிக்குப்பம் மயானத்தில் அரசு மரியாதையுடன், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
எழுத்தாளர் மனோஜ்தாஸ் மறைவுக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மனோஜ்தாசை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கியவாதிகள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.