திருவள்ளூர் நகராட்சியில் 11 துணி கடைகளுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம்
திருவள்ளூர் நகராட்சியில் 11 துணி கடைகளுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வு
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின் பேரில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் திருவள்ளூர் ஜெ.என். சாலை, சி.வி. நாயுடு சாலை, எம்.ஜி.ஆர். சாலை, நேதாஜி சாலை, செங்குன்றம் சாலை போன்ற பகுதிகளில் உள்ள துணி கடைகளுக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அபராதம் விதிப்புஇந்த ஆய்வின்போது துணிக்கடைகள் அரசின் உத்தரவை முறையாக கடைப்பிடிக்காமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் சந்தானம் திருவள்ளூரில் உள்ள 11 துணி கடைகளுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து இனிமேல் இதுபோன்று செயல்படக்கூடாது என்று அறிவுரைகளை வழங்கினர்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கி, அனைவரையும் கண்டிப்பாக முக கவசம் அணிய வலியுறுத்த வேண்டும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்து வர அறிவுறுத்த வேண்டும் என அவர் எச்சரித்தார்.