திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை
கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடித்து குணமடைந்து உள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவடட நிர்வாகம் மூலம் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி
மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு குறைவு காரணமாக திருவண்ணாலை மாவட்டத்தில் தடுப்பூசி போட்டு கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசியை 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் போடுவதற்கான முயற்சியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருகிற 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்காக ஆன்லைனில் பதிவு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
45 ஆயிரம் பேர்
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் 34 ஆயிரத்து 573 பேரும், 2-வது டோஸ் 6 ஆயிரத்து 984 பேரும் போட்டு உள்ளனர். அதேபோல் கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸ் 3 ஆயிரத்து 161 பேரும், 2-வது டோஸ் 372 பேரும் போட்டு உள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது நாள் ஒன்றுக்கு 1500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு வருகின்றனர். தற்போது 4 ஆயிரம் கோவிஷீல்டு மற்றும் 4 ஆயிரம் கோவேக்சின் என 2 தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளது. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் மற்றும் 2-வது டோஸ் என 45 ஆயிரத்து 90 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story