ரூ.58 கோடி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்
பழனியில் நடைபெற்று வரும் ரூ.58 கோடி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
பழனி:
பழனி பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி ராஜமாணிக்கம், நகர செயலாளர் கந்தசாமி ஆகியோர் தலைமையில் அந்த கட்சியினர் பழனியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் பொறியாளர் தங்கராஜூவிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பழனியில், நகர்நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58 கோடியில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் புதிதாக சாலை, சாக்கடை கால்வாய் அமைத்தல், சாலையோர பகுதியில் பூச்செடிகள் நட்டு பூங்கா உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் தரமற்ற நிலையில் நடப்பதால் அரசின் நிதி வீணாகிறது.
குறிப்பாக மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் புதிதாக எந்தவொரு மரக்கன்றுகளும் நடப்படவில்லை.
சாலைகள் முறையாக அமைக்காததால் சிறுமழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் சாய்வுதளம் அமைக்கப்படவில்லை.
எனவே இந்த திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதன் தரம் குறித்து அறிய வேண்டும். இவ்வாறு ஆய்வு செய்த பிறகே நிதி ஒதுக்கீடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்று கொண்ட கோட்ட பொறியாளர் தங்கராஜ் கூறுகையில், விரைவில் நகர்நல மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story