பந்தலூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
பந்தலூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றில் மரங்கள் சாய்ந்தன.
பந்தலூர்
பந்தலூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றில் மரங்கள் சாய்ந்தன.
பலத்த மழை
பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யன்கொல்லி, அம்பலமூலா, வெள்ளேரி, எருமாடு, நம்பியார்குன்னு, மழவன்சேரம்பாடி, கல்லுகுன்னி, கொளப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
அப்போது சூறாவளி காற்றும் வீசியது. இதனால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்கள் காற்றில் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தன. பந்தலூர் மலைப்பகுதி என்பதால் மழையின் காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்தடை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். அப்போது சூறவாளி காற்று வீசியதில், சில வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தன.
வீடுகள் சேதம் அடைந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்களில் மீது விழுந்தால் மின்ஓயர்கள் அறுந்து விழுந்தன. அம்பலமூலா அருகே கல்லுகுன்னி என்ற இடத்தில் மரங்கள் மின்கம்பிகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு, அந்த கிராமமே இருளில் மூழ்கியது.
இதனால் தொலைதொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதேபோல பழையநெல்லியாளம் பகுதியிலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. ஆபத்தான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story