பெருந்துறை அருகே காதல் விவகாரத்தில் சமரசம் செய்ய முயன்றவருக்கு கத்திக்குத்து - 3 பேருக்கு வலைவீச்சு
பெருந்துறை அருகே காதல் விவகாரத்தில் சமரசம் செய்ய முயன்றவரை கத்தியால் குத்திவிட்டு தப்பித்து ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
பெருந்துறை,
பெருந்துறை ஈங்கூர் அருகே உள்ள கூத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35). சீலம்பட்டியை சேர்ந்தவர் தனபால் (40). இவர் மோகன்ராஜின் நண்பர் ஆவார். மோகன்ராஜ் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த 5 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண் மோகன்ராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு மோகன்ராஜ் மறுத்ததாக தெரிகிறது.
இதுபற்றி அந்த பெண் தனபாலிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் மோகன்ராஜை பெருந்துறை பவானி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் வரவழைத்தார். பின்னர் அவரிடம் காதல் விவகாரம் குறித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மோகன்ராஜின் நண்பர்கள் 2 பேர் தனபாலை மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மோகன்ராஜின் நண்பர் ஒருவர் கத்தியால் தனபாலை குத்தியுள்ளார். பின்னர் மோகன்ராஜ் தனது நண்பர்களுடன் தப்பித்து ஓடிவிட்டார். கத்திக்குத்தில் காயம் அடைந்த தனபால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து, தனபாலை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகிறார்.
Related Tags :
Next Story