மாவட்ட செய்திகள்

பழனி அருகே கிணற்றில் வீசி சிசு கொலை: மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை + "||" + Near Palani Infanticide by throwing into a well State Child Rights Member of the Security Commission Inquiry in person

பழனி அருகே கிணற்றில் வீசி சிசு கொலை: மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை

பழனி அருகே கிணற்றில் வீசி சிசு கொலை: மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை
பழனி அருகே கிணற்றில் வீசி சிசு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை நடத்தினார்.
பழனி, 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் மங்கையர்க்கரசி (வயது 29). ஆசிரியை. திருமணம் ஆகாமல் கர்ப்பமான இவருக்கு, கடந்த 19-ந்தேதி வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டது.அப்போது, அவருக்கு பிறந்த ஆண் குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது. மேலும் ரத்தப்போக்கு அதிகமானதால், பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மங்கையர்க்கரசியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்கையர்க்கரசியின் தாய் தங்கம், தந்தை மணியன், தம்பி காளிதாஸ் மற்றும் அவரை கர்ப்பமாக்கிய காதலன் அபிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

இந்தநிலையில் கிணற்றில் வீசி சிசு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தவும், வழக்கின் தன்மை பற்றி அறியவும் தனி அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வின் உறுப்பினர் ராமராஜ் நேற்று ஆயக்குடிக்கு வந்தார். அவர், ஆயக்குடி போலீஸ் நிலையம் சென்று வழக்கின் தன்மை, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் சிசு வீசப்பட்ட கிணறு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ் நிருபர்களிடம் கூறுகையில், கிணற்றில் வீசி சிசுவை கொலை செய்த வழக்கில் போலீஸ் விசாரணை முறையாக நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பேரூராட்சி செயல்அலுவலர் தலைமையில் செயல்படும் கிராம பாதுகாப்பு குழு இந்த கொலையை தடுத்து இருக்க முடியுமா, வழக்கில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வருங்காலத்தில், தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படும் கிராம பாதுகாப்புக்குழு முறையாக செயல்படுகிறதா? என கண்காணிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.

ஆயக்குடியில் விசாரணையை முடித்து விட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு ராமராஜ் வந்தார். பின்னர் அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிசு கொலையை எந்த சூழலிலும் அனுமதிக்க முடியாது. பிறந்த குழந்தையை கொலை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது. குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாவிட்டால் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பிரச்சினை என்றால் சைல்டு லைனுக்கு 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

குழந்தை நல பிரச்சினைகளை கவனிக்க தனியாக ஒரு துறையை அமைக்க வேண்டும். அதன்கீழ் மாவட்ட குழந்தை நல குழு, இளையோர் நீதி குழுமம், குழந்தை பாதுகாப்பு குழுக்களை கொண்டு வரவேண்டும். மேலும் குழந்தை திருமணங்களை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்கள் உள்ளன. கொரோனா தொற்று காலத்தில் குழந்தைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதனால் குழந்தை தொழிலாளர்கள் உருவாகுவதோடு, குழந்தை திருமணங்களும் அதிகரிக்கின்றன. இதனால் இளம் பருவத்திலேயே கர்ப்பிணியாகின்றனர். அதன்மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வியால் உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதேபோல் தவறான இணையதளத்தை பார்த்து குழந்தைகள் தவறான வழிகளில் செல்லவும் வாய்ப்பு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிப்பது வேதனையாக இருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் தடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.13 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
பழனி அருகே ரூ.13 லட்சத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
2. பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி பொதுமக்கள் மனு
பழனி அருகே பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி பொதுமக்கள், தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.