தேன்கனிக்கோட்டை அருகே அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு


தேன்கனிக்கோட்டை அருகே அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 April 2021 10:15 PM IST (Updated: 29 April 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அரச குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 40). தொழிலாளிகள். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். பொன்னுசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னுசாமி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பொன்னுசாமி அரிவாளால் மனைவியின் தலை, முகம், பல்வேறு பகுதியில் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் லட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். 
வலைவீச்சு
இதையடுத்து பொன்னுசாமி மனைவியை அங்குள்ள சுகாதார வளாகத்தில் தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் நேற்று காலை சுகாதார வளாகத்திற்கு பொதுமக்கள்சென்றபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். 
மனைவியை, கணவர் அரிவாளால் வெட்டி படுகொலை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story