கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்- கலெக்டா் சந்திரசேகா் சாகமூாி


கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்- கலெக்டா் சந்திரசேகா் சாகமூாி
x
தினத்தந்தி 29 April 2021 10:17 PM IST (Updated: 29 April 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் காலியானதையடுத்து, தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தும் முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப்பணிகள் மற்றும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

உணவு பட்டியல்

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, ஓட்டல் உரிமையாளர்கள் சரியான நேரத்தில் தரமான உணவு வழங்க வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கும் பணியை தற்போது செய்து வரும் ஓட்டல் உரிமையாளர்களிடமிருந்து, அவர்கள் வழங்கும் உணவின் பட்டியலையும், உணவு வழங்கப்படும் நேரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

காய்கறி சூப்

பின்னர் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறுகையில், கொரோனா பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்கப்படும் நேரத்தை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். அதாவது காலை 6 முதல் 7 மணிக்குள் தேநீர், காபி, பிஸ்கட் வழங்க வேண்டும். காலை 7.30 முதல் 8 மணிக்குள் காலை உணவும், காலை 10.30 முதல் 11 மணிக்குள் காய்கறி சூப்பும், மதியம் 12.30 முதல் 1 மணிக்குள் மதிய உணவும், மாலை 4 முதல் 4.30 மணிக்குள் தேநீர் மற்றும் சுண்டலும், இரவு 7.30 முதல் 8 மணிக்குள் இரவு உணவும், இரவு 8.30 முதல் 9 மணிக்குள் பாலும் வழங்க வேண்டும்.
இவை அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள், சூடாகவும், சுவையானதாகவும் வழங்க வேண்டும். அப்போது தான் தொற்று ஏற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க முன்வருவார்கள். கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவு போலவே, கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும்.

சுகாதார பணிகள்

மேலும் அதிகபட்சமாக 8,500 நபர்களுக்கு உணவு வழங்க தயாராக உள்ள உணவகத்தை கண்டறிந்து, தேவைப்படும் பட்சத்தில் உணவு வழங்க ஏற்பாடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பற்றிய அவர்களது கருத்தை கேட்டறிந்து, ஓட்டல் உரிமையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
கொரோனா பாதுகாப்பு மையங்களில் தினசரி 2 முறை சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளும் நபர்களுக்கு 30 வயதிற்கு மிகாமலும், உபநோய் இல்லாதவர்களாகவும், ஆரோக்கியமாக உள்ளவர்களை மட்டும் நியமிக்க வேண்டும்.

குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

கொரோனா பாதுகாப்பு மையங்களில் உள்ள நோயாளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க, ஒவ்வொரு மையத்திலும் ஒரு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வைக்கவும், அவர்கள் குடிப்பதற்கு சுடு தண்ணீருக்கு 30 படுக்கைகளுக்கு ஒரு கொதி கெண்டி(ஜக்) வாங்கி வைக்கவும், சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story