11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணிக்கை


11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணிக்கை
x
தினத்தந்தி 29 April 2021 10:33 PM IST (Updated: 29 April 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. இதை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த 6-ந் தேதியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இதில் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் 78.41 சதவீத வாக்குகளும், மயிலம் தொகுதியில் 79.54 சதவீத வாக்குகளும், திண்டிவனம் தொகுதியில் 78.43 சதவீத வாக்குகளும், வானூர் தொகுதியில் 79.79 சதவீத வாக்குகளும், விழுப்புரம் தொகுதியில் 76.97 சதவீத வாக்குகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 81.39 சதவீத வாக்குகளும், திருக்கோவிலூர் தொகுதியில் 76.27 சதவீத வாக்குகளும் பதிவானது. இதன் மொத்த வாக்குப்பதிவு 78.62 சதவீதமாகும்.

அடிப்படை வசதிகள்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியிலும், செஞ்சி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் செஞ்சி மேல்களவாயில் உள்ள டேனி கல்வியியல் கல்லூரியிலும், மயிலம், திண்டிவனம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியிலும், வானூர் தொகுதியில் பதிவான வாக்குகள் வானூர் ஆகாசம்பட்டு ஸ்ரீஅரவிந்தர் கலை அறிவியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருக்கோவிலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் கண்டாச்சிபுரம் எஸ்.கொல்லூரில் உள்ள வள்ளியம்மை மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்விசிறி வசதி உள்ளிட்ட வசதிகளும் பாதுகாப்பு வசதிகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது தடையில்லா மின்சார வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வாக்கு எண்ணும் மையங்கள் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்புக்குள் முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சுற்றுகள்

வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்காக 16 மேஜைகள் போடப்பட உள்ளது. இதில் ஒரு மேஜை, தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும். இன்னொரு மேஜையில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மீதமுள்ள 14 மேஜைகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெறும். இதற்காக ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படுவதோடு வீடியோ கேமரா மூலமும் பதிவு செய்யப்பட உள்ளது.
செஞ்சி தொகுதியில் பதிவான வாக்குகள் 26 சுற்றுகளாகவும், மயிலம் தொகுதியில் 22 சுற்றுகளாகவும், திண்டிவனம் தொகுதியில் 24 சுற்றுகளாகவும், வானூர் தொகுதியில் 24 சுற்றுகளாகவும், விழுப்புரம் தொகுதியில் 27 சுற்றுகளாகவும், விக்கிரவாண்டி தொகுதியில் 24 சுற்றுகளாகவும், திருக்கோவிலூர் தொகுதியில் 25 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறவும், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கவும் 7 தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் 

இதனிடையே தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றியே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதோடு வெற்றி விழா கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்துள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்த தேவையான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. 
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஏ.கே.டி. பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. 

Next Story