மொரப்பூர் பகுதியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி தடுப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


மொரப்பூர் பகுதியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி தடுப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 April 2021 10:40 PM IST (Updated: 29 April 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் பகுதியில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானதால் அச்சமடைந்த பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொரப்பூர்:
மொரப்பூர் பகுதியில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானதால் அச்சமடைந்த பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள சுண்டாங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி பகுதியிலுள்ள ஒரு தனியார் கிரானைட் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டது. 
இதையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
மற்றொருவர் சாவு
இதேபோல் மொரப்பூர் அருகே உள்ள பொம்பட்டி கிராமத்தை 35 வயதுடைய நபர் குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கி மரக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். ஊருக்கு வந்த அந்த நபர் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 
இந்த நிலையில் 35 வயது நபர் சிகிச்சை பலனின்றி நேற்று பெங்களூரு மருத்துவமனையில் இறந்தார். மொரப்பூர் பகுதியில் 2 பேர் கொரோனாவுக்கு இறந்ததால் கிராமமக்கள் அச்சம் அடைந்தனர். மொரப்பூர் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.  மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story