கல்லாறு பழப்பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கியது
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழப்பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழப்பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது.
கல்லாறு பழப்பண்ணை
மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் கல்லாறு கொண்டை ஊசி வளைவு அருகே அரசு தோட்டக்கலை பண்ணை (கல்லாறு பழப்பண்ணை) உள்ளது.
மிதவெப்பமான சீதோஷ்ண நிலை கொண்ட பகுதியில் இந்த பண்ணை இருப்பதால் பழங்களின் அரசி என வர்ணிக்கப்படும் மங்குஸ்தான், துரியன், லாங்சாட், ரம் பூட்டான் வெல்வெட் ஆப்பிள், முட்டை பழம், பலா ஆகிய மரங்களும் வாசனை திரவிய பயிர்கள் அலங்கார செடி வகைகள் சாகுபடி செய்யப் பட்டு வருகின்றன.
பலாப்பழ சீசன் தொடங்கியது
கல்லாறு பழப்பண்ணையில் சிங்கப்பூர் பலா, வேலிபலா, தஞ்சாவூர் பலா, பர்லியார் பல என 202 பலா மரங்கள் உள்ளன. பழப்பண்ணையில் மே மாதம் பலாப்பழ சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும். ஆனால் தற்போது இடைக்கால பருவ பலாப்பழ சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி உள்ளது.
இதனால் பலா மரங்களில் கொத்துக்கொத்தாக பலாப் பழங்கள் காய்த்து தொங்குகின்றன. ருசி மிகுந்த பழுத்த பலா பழங்களை குரங்குகள் ஆசை தீர பசியாற தின்று வருகின்றன. மேலும் பலாப்பழ மணம் காற்றில் கலந்து வீசுவதால் பலா மரங்களை தேடி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இங்கு புகுந்து அவற்றை தின்று நாசப்படுத்தி வருகிறது.
கிலோ ரூ.15-க்கு விற்பனை
இந்த பண்ணையில் பலாப்பழம் ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆசையுடன் பலாபழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
யானை மற்றும் பிற வன விலங்குகள் பண்ணைக்குள் புகுந்து பழங்களை நாசம் செய்வதைத் தடுக்கும் பொருட்டு பண்ணையை சுற்றிலும் 1500 மீட்டர் சுற்றளவிற்கு சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 20-ந் தேதி முதல் பழப்பண்ணை மூடப்பட்டுள்ளது. அதன் நுழைவு வாயிலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க இல்லை என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாற்றுகள் வாங்க விவசாயிகளும், பலாப்பழம், ஜாம், ஜெல்லி, ஊறுகாய் வாங்க சுற்றுலாப்பயணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர் என்று பண்ணை மேலாளர் ஹரி பாஸ்கர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story