வலை விரித்து மீன்களை அள்ளிய கிராம மக்கள்


வலை விரித்து மீன்களை அள்ளிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 29 April 2021 11:26 PM IST (Updated: 29 April 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் வலை விரித்து ஏராளமான மீன்களை கிராம மக்கள் அள்ளி சென்றனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் வலை விரித்து ஏராளமான மீன்களை கிராம மக்கள் அள்ளி சென்றனர்.

மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை நன்றாக பெய்ததால் ஏராளமான கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி காணப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி கிராம மக்கள் விவசாயம் செய்தனர். மேலும் நிரம்பிய கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் ஏராளமான மீன்குஞ்சுகள் இனப்பெருக்கத்திற்காக விடப்பட்டது.
தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாயில் இருந்த தண்ணீர் வற்றத் தொடங்கியது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்களில் தற்போது மீன்பிடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காரைக்குடியை அடுத்த கலிபுலி ஊராட்சியில் உள்ள புலிகுத்தி அய்யனார் கோவில் கண்மாயில் ஆண்டுதோறும் மீன்பிடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டிற்கான மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

மீன்களை அள்ளினர்

இதில் கல்லுவயல், புலிக்குத்தி, மணப்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியர்கள் மற்றும் பெண்கள் அதிகாலையிலேயே கண்மாயில் திரண்டனர். அதன் பின்னர் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் ஊத்தா, கச்சா, மடி வலை, கொசு வலை உள்ளிட்ட உபகரணங்களை வைத்து கண்மாய்க்குள் இறங்கினர். இதில் அவர்களின் வலையில் குரவை, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, அயிரை ஆகிய வகைகளைச் சேர்ந்த ஏராளமான மீன்கள் பிடிபட்டன. வலையில் ஏராளமான மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளிச் சென்றனர். புலிக்குத்தி, மணப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அன்று இரவு மீன் குழம்பு வைத்து சாப்பிட்டனர்.

Next Story