சுனாமி பீதியால் கரை திரும்பிய மீனவர்கள்


சுனாமி பீதியால் கரை திரும்பிய மீனவர்கள்
x
தினத்தந்தி 29 April 2021 11:39 PM IST (Updated: 29 April 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

சுனாமி பீதியால் கரை திரும்பிய மீனவர்கள்

கன்னியாகுமரி, 
கன்னியாகுமரியில் நிலநடுக்கத்தால் பூமி அதிர்ந்தது. இதனால், சுனாமி பீதியால் மீனவர்கள் கரை திரும்பினர். 
நிலநடுக்கம்
கன்னியாகுமரியில் நேற்று மாலை 3.45 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கம் சின்னமுட்டம், கோவளம், ஆரோக்கியபுரம் போன்ற மீனவ கிராமங்களிலும் உணரப்பட்டது. 
குமரி மாவட்ட கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கட்டுமர மீனவர்கள் மட்டும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். 
நேற்றும் வழக்கம்போல் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். மாலை நேரத்தில் கடல் வழக்கத்திற்கு மாறாக குளம் போல் காட்சியளித்தது. அத்துடன் கரை பகுதியில் நில நடுக்கம் உணரபட்டதால் சுனாமி வரக் கூடும் என்ற அச்சத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் பாதியில் கரைக்கு திரும்பினர்.
திருவள்ளுவர் சிலை
இதற்கிடைேய மாலையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல சில மீனவர்கள் தயாராகி கொண்டிருந்தனர். அவர்கள் தூண்டில்களை தயார் செய்து, வலைகளை தயார் செய்து கொண்டு இருந்தனர். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை கைவிட்டனர்.
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வளாகத்திலும் நேற்று மாலை நில அதிர்வு உணரப்பட்டதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ் தெரிவித்தார். ஆனால் அங்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஒரு சில கடைகள் திறந்து இருந்தன. ஒரு கடை உரிமையாளர் யூசுப் கூறும்போது, கடையின் முன்பு உள்ள தகரக் கூரை திடீரென பலத்த சத்தத்துடன் ஆடியதாகவும், கடையின் உள்ளே அடிக்கி வைத்திருந்த பொருட்கள் சரிந்து விழுந்ததாகவும் கூறினார். 

Next Story