உடல்களை திறந்த வாகனத்தில் எடுத்து செல்லும் அவலம்
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறக்கும் நோயாளிகளை திறந்த வாகனத்தில் நோய் பரப்பும் வகையில் எடுத்துச் செல்லும் அவலம் நிலவுகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறக்கும் நோயாளிகளை திறந்த வாகனத்தில் நோய் பரப்பும் வகையில் எடுத்துச் செல்லும் அவலம் நிலவுகிறது.
அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் தற்போது கொரோனா 2-வது அலை வேலகமாக பரவி வருவதை போல ராமநாதபுரம் மாவட்டத்திலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகி வருகின்றனர்.
பொதுவாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இறக்கும் நபர்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஆஸ்பத்திரியில் உள்ள அமரர் ஊர்தி அல்லது இதற்கென உள்ள வாகனங்களில் முறைப்படி ஏற்றப்பட்டு சுடுகாட்டில் கொண்டு சென்று குழுதோண்டி உரிய கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுவது வழக்கம்.
புகார்
இந்த நடைமுறைதான் கடந்த காலங்களில் இருந்து வந்தது. தற்போது அதிகம்பேர் இறந்து வருவதுடன் கொரோனா இறப்பை பெரிதாக கண்டுகொள்ளாததால் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
நேற்று காலை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை திறந்தவெளி தனியார் அமரர் ஊர்தியில் எந்தவித பாதுகாப்பு நடைமுறையையும் பின்பற்றாமல் உறவினர்கள் வாகனத்தில் ஏறி நோய்களை பரப்பும் வகையில் சர்வசாதாரணமாக கொண்டு செல்லும் காட்சி அரங்கேறியது.
இந்த வாகனத்தில் உடலை கொண்டு செல்வதை கண்ட ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு உடைகள் பற்றாக்குறையாக உள்ளன. இதனால் இறந்தவர்களின் உடலை துணியில் சுற்றிக்கொடுக்கும் நிலை தொடர்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வழிகாட்டல்
இது குறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அல்லியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் சுகாதாரத்துறை வழிகாட்டல் படி நல்ல முறையில் கட்டப்பட்டு அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் செல்லும் நடைமுறை தான் உள்ளது.
நடவடிக்கை
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் விரும்பினால் நன்கு மூடிய வாகனத்தில் பாதுகாப்பாக எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனை மீறி திறந்த வாகனத்தில் எடுத்து சென்றதாக கூறப்படும் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story