நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 5 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 5 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
நெல்லை, ஏப்:
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 5 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
அப்போது வாக்குகள் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் தொகுதி வாரியாக அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் துணை ராணுவம் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டுகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படுகிறது. நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஷ்ணு தலைமையில் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறையையொட்டி உள்ள மற்றொரு அறையில்தான் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்கு மேஜைகள் போடப்பட்டு, தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. உள்ளே மேஜையில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் நின்று கொண்டு எந்திரத்தை எடுத்து அதில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவாகி இருக்கும் ஓட்டுகள் விவரத்தை காண்பிப்பார்கள். அதனை தடுப்பு வேலிக்கு வெளியே இருக்கும் முகவர்கள் பார்த்து பதிவு செய்து கொள்ளலாம். மேஜைக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் அளிக்கும் பட்டியல்படி வரிசையாக எடுத்து வந்து கொடுக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தடுப்புகள் அமைப்பு
வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், அவர்களுடைய முகவர்கள் வந்து செல்வதற்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு தொகுதியை சேர்ந்த முகவர் மற்றொரு தொகுதிக்குள் நுழைந்து விடாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர தொகுதி வாரியாக அவர்களை உள்ளே அனுப்பும் பணிக்கும் தனித்தனியாக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களே இருப்பதால் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story