பாபநாசத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் பீரோவை உடைத்து 5 பவுன் நகைகள் ரூ.10 ஆயிரம் திருட்டு கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பாபநாசத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் பீரோவை உடைத்து 5 பவுன் நகைகள் ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாபநாசம்:-
பாபநாசத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் பீரோவை உடைத்து 5 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பாலாஜி நகரில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவர், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளநிலை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நேற்று முன்தினம் காலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கும்பகோணத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.
5 பவுன் நகைகள்-ரூ.10 ஆயிரம் திருட்டு
பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் இதுகுறித்து பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
வலைவீச்சு
தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் அங்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் டப்பி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளையர்கள் வீட்டுக்கு உள்ளே வந்த பின்பக்க கதவில் இருந்து மோப்பம் பிடித்தவாறே பாலாஜி நகர் தெருக்களில் சுற்றி வந்து நின்று விட்டது.
இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story