காவல்கிணறு அருகே பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு
காவல்கிணறு அருகே பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடக்கன்குளம், ஏப்:
காவல்கிணறு அருகே பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு நிலவியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி
சென்னையில் இருந்து விமானத்துக்கு பயன்படுத்தும் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு வந்தது. இந்த லாரியை காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் ஓட்டி வந்தார்.
நேற்று காலையில் நெல்லை மாவட்டம் காவல்கிணறை அடுத்த அம்பலவாணபுரம் விலக்கு அருகில் நாற்கர சாலையில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
போக்குவரத்து பாதிப்பு
எனினும் டேங்கரில் இருந்த பெட்ரோல் லேசாக கசிந்து சாலையில் ஓடியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதுகுறித்து வள்ளியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, டேங்கர் லாரியில் ஏற்பட்ட கசிவை அடைத்து சரி செய்தனர். தொடர்ந்து கிரேன் மூலம் டேங்கர் லாரியை தூக்கி நேராக நிறுத்தினர். பின்னர் அந்த லாரி திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றது. இதனால் அந்த வழியாக சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story