ஓட்டு எண்ணிக்கைக்கு வருகை தரும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை


ஓட்டு எண்ணிக்கைக்கு வருகை தரும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 30 April 2021 1:27 AM IST (Updated: 30 April 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கைக்கு வருகை தரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நெல்லை, ஏப்:
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கைக்கு வருகை தரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வேட்பாளர்-முகவர்கள்

தமிழகத்தில் கடந்த  6-ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த பணியின்போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய முகவர்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது முகவர்கள் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கொரோனா பரிசோதனை

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் போட்டிருக்க வேண்டும். அல்லது கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்று சான்றளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான கொரோனா பரிசோதனை முகாம் நேற்று அந்தந்த தொகுதி தலைமை இடங்களில் நடத்தப்பட்டது. நெல்லை தொகுதிக்கான முகாம் டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியிலும், பாளையங்கோட்டை தொகுதிக்கான முகாம் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி அருண்ஸ் மகாலிலும் நடைபெற்றது.

இன்று முடிவு

இதில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வரிசையாக கொரோனா பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த மாதிரிகள் அனைத்தும் பாதுகாப்பாக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த மாதிரிகளை ஆய்வு செய்து இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு அறிவிக்கப்படுகிறது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். 

உடல் வெப்ப பரிசோதனை 

இதுதவிர கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று வந்தவர்களும், 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழையும் போது தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது. அப்போது குறிப்பிட்ட அளவை தாண்டி வெப்ப நிலை கண்டறியப்பட்டால் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் வாக்கு எண்ணிக்கை செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story