தென்காசியில் தயார் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம்


தென்காசியில் தயார் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம்
x
தினத்தந்தி 30 April 2021 1:36 AM IST (Updated: 30 April 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளது.

தென்காசி, ஏப்:
தென்காசியில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

வாக்கு எண்ணிக்கை மையம்

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான தென்காசியை அடுத்த கொடிக்குறிச்சியில் உள்ள யு.எஸ்.பி. கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. 

5 தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதனை தனியாக ஒரு அறையில் டி.வி.க்களில் காணும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் அமர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தீவிர ஏற்பாடுகள்

இந்த நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து தேர்தல் தாசில்தார் சண்முகம் கூறியதாவது:-
இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் அதிகாரிகள் மட்டும் அந்த அறைக்குள் இருப்பார்கள். அதற்கு வெளியே வேட்பாளர்களின் பிரதிநிதிகள் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

வழக்கமாக எல்லா தேர்தல்களிலும் செய்யக்கூடிய ஏற்பாடுகளை தவிர தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, வாக்கு எண்ணும் மையத்திற்குள் முக கவசம் இல்லாமல் யாருக்கும் அனுமதி இல்லை. மேலும் இங்கு வரும் அனைவரும் கொரோனா இல்லை என சான்று கொண்டு வரவேண்டும். வாக்கு எண்ணும் அறையில் இருப்பவர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
வாக்குகள் எண்ணப்படும் ஒவ்வொரு மேஜைக்கும் ஒவ்வொரு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் முடிவுகளை அங்குள்ள டிஜிட்டல் பலகையில் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு வரும் அலுவலர்களுக்கு தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story