வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
ஜெயங்கொண்டத்தில் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
வாக்கு எண்ணிக்கை
சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்கு எண்ணும் மைய முகவர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முன்னதாக முகாம் நடைபெற்ற இடத்தில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு, முகவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையாக நின்று பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் வெள்ளை நிற வட்டமிடப்பட்டு இருந்தது.
கொரோனா பரிசோதனை
இதில் தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதற்காக அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் சென்றனர். அவர்களுக்கு பரிசோதனைக்காக, முழு கவச உடை அணிந்தவர் சளி மாதிரிகளை எடுத்தார்.
இந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முகாமில் ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன், சுகாதாரத்துறை ஆய்வாளர் பிரவீன்குமார் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story