தைலமரக்காட்டில் திடீர் தீ; வயலிலும் பரவியது
தைலமரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. வயலிலும் தீ பரவியது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் உள்ள பெரியவளையம் முந்திரிக்காடு வனப்பகுதிக்கு எதிரே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே தனியாருக்கு சொந்தமான தைல மரக்காட்டில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் சில மரங்கள் வெட்டப்பட்டு, அதன் காய்ந்த சருகுகள் கீழே விழுந்திருந்ததால் அருகே உள்ள வயல் முழுவதும் தீ பரவியது. இதனால் தீயை அணைக்க, தீயணைப்பு துறையினருக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்ததால், பக்கத்து வயல்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. அப்பகுதியில் யாரேனும் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் போட்டிருப்பார்களா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே தீ வைத்தனரா? என்பது குறித்து தீயணைப்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story