பெங்களூருவில் விற்க முயன்ற 104 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆந்திராவை சேர்ந்தவர் கைது


பெங்களூருவில் விற்க முயன்ற 104 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆந்திராவை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 30 April 2021 2:23 AM IST (Updated: 30 April 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற 104 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆந்திராவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு: பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற 104 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆந்திராவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்தவர்

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள வணிகவளாகம் பின்புறம் கஞ்சா விற்பனை செய்ய சிலர் முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு சொகுசு காரை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அந்த காரின் பின்பக்க இருக்கையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதையடுத்து, டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகேந்திரா (வயது 34) என்று தெரிந்தது. இவா், ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்க முயன்றது தெரியவந்தது.

104 கிலோ கஞ்சா பறிமுதல்

கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கஞ்சா தேவை அதிகமாக இருக்கும் என்பதால், இதனை பயன்படுத்தி கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று, ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதற்கு முன்பும் அவர் ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்துள்ளார்.

நாகேந்திராவிடம் இருந்து 104 கிலோ கஞ்சா மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.91 லட்சத்து 30 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான நாகேந்திரா மீது எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story