அம்மாபேட்டை அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது


அம்மாபேட்டை அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 30 April 2021 2:30 AM IST (Updated: 30 April 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே மாணவியை கடத்திய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே மாணவியை கடத்திய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
மாணவி மாயம்
அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 
இந்த நிலையில் அந்த மாணவியை கடந்த 23-ந் தேதி திடீரென காணவில்லை. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தார்கள்.
இந்த நிலையில் நேற்று அம்மாபேட்டை அருகே உள்ள சின்னபள்ளம் வாகன சோதனை சாவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபரும், பெண்ணும் இருந்தனர். 
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி வாகனத்தில்  இருந்த வாலிபரிடம் விசாரித்தனர்.
வாலிபர் போக்சோவில் கைது
விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பரத் (வயது 20) என்பதும், இவர் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் குடியிருந்து கூலி வேலைக்கு சென்று வருவதும் தெரிய வந்தது.
மேலும் நடத்திய விசாரணையில், அவருடன் இருந்த பெண் அம்மாபேட்டை பகுதியில் கடந்த 23-ந் தேதி காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவி என்பதும், அந்த மாணவியை பரத் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும்,     பின்னர் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரில்   ஒரு வீட்டை வாடகை எடுத்து அங்கு மாணவியுடன் தங்கியதையும் ஒப்புக்கொண்டார். 
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து மாணவியை போலீசார் மீட்டனர். 
பின்னர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக  போலீசார் பரத்தை போக்சோ சட்டத்தின்கீழ்  கைது செய்தனர். பின்னர் ஈரோடு மகிளா கோர்ட்டில்  ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Next Story