ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 473 பேருக்கு கொரோனா தொற்று- மூதாட்டி பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 473 பேருக்கு கொரோனா தொற்று- மூதாட்டி பலி
x
தினத்தந்தி 30 April 2021 4:07 AM IST (Updated: 30 April 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 473 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

ஈரோடு,

கொரோனா வைரசின் 2-வது அலை ஈரோடு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதற்காக நோய் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் தற்காலிக பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
473 பேருக்கு தொற்று
மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக மேலும் 473 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 729-ஆக உயர்ந்தது.
மூதாட்டி பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு கடந்த 24-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவர் கடந்த 26-ந்தேதி சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
2,966 பேர் சிகிச்சை
இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 308 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 603 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
தற்போது தொற்று உள்ள 2 ஆயிரத்து 966 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Next Story