தாளவாடி அருகே கல்குவாரி குட்டை தண்ணீரில் மூழ்கி வாலிபர் சாவு
தாளவாடி அருகே கல்குவாரி குட்டை தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தாளவாடி,
தாளவாடியைச் சேர்ந்தவர் இருதயராஜ். அவருடைய மனைவி புஷ்பா. இவர்களது ஒரே மகன் ஜீவா (வயது 20). தாளவாடி அருகே மெட்டல்வாடியில் கல்குவாரி உள்ளது. இதில் சமீபத்தில் பெய்த மழையால் குட்டையில் சுமார் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது.
இந்த நிலையில் ஜீவா, அவருடைய நண்பர்கள் 6 பேர் மோட்டார்சைக்கிள்களில் அந்த கல்குவாரி குட்டைக்கு நேற்று மதியம் குளிக்க சென்றுள்ளனர். நண்பர்கள் அனைவரும் குட்டையில் இறங்கி குளித்தனர்.
வாலிபர் சாவு
ஆனால் ஜீவா அங்குள்ள 50 அடி உயர பாறை மீது ஏறி நின்று, அதிலிருந்து குட்டையில் குதித்து குளித்துள்ளார். இதில் அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். பின்னர் நண்பர்கள் அனைவரும் குளித்துவிட்டு கரை ஏறினர். அப்போது ஜீவாவை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆசனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கல்குவாரி குட்டையில் இறங்கி ஜீவாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பாறைகளின் இடுக்கில் சிக்கிய ஜீவாவின் உடலை மீட்டனர். இதுபற்றி அறிந்ததும் தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story